ஜனாதிபதி மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வலுப்படுத்தப்பட்ட சிங்கள – பௌத்த பேரினவாதக்கொள்கையானது நாட்டிலுள்ள இன, மத சிறுபான்மையின மக்களின் மதச்சுதந்திரம் புறக்கணிக்கப்படுவதற்குப் பெரிதும் வழிவகுத்தது.

இருப்பினும் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை ஜனாதிபதியின் மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என மதச்சுதந்திரம் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைப்பு ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் 8 – 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி, உலகளாவிய ரீதியில் மதச்சுதந்திரம் தொடர்பான உரிமையை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி பிரான்ஸை தளமாகக்கொண்டியங்கிவரும் சர்வதேச கட்டமைப்பான மதச்சுதந்திரம் தொடர்பான (மனசாட்சி சுதந்திரம்) ஒருங்கிணைப்பு அமைப்பு, கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவது குறித்து கடந்த சில வருடங்களாக இலங்கையின் உயர்நீதிமன்றமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் வருடாந்தம் சுமார் 15,000 முறைப்பாடுகளைப் பெற்றுவருகின்றன.

இவ்வனைத்து முறைப்பாடுகளும் நிறைவேற்றதிகாரம் மற்றும் அரசாங்க நிர்வாகக்கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிரானவையாகவே காணப்படுகின்றன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம் கடந்த 2019, 2020, 2021 மற்றும் 2022 (செப்டெம்பர் மாதம் வரை) ஆம் ஆண்டுகளில் முறையே 8983, 6417, 6222, 6078 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இம்முறைப்பாடுகளில் பெருமளவானவை சித்திரவதைக்குட்படுத்தப்படல், தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைப்பு உள்ளிட்ட தனிப்பட்ட சுதந்திரத்தை மீறும் வகையிலான செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவையாகும்.

2019 ஆம் ஆண்டில் 1629 ஆகக் காணப்பட்ட அத்தகைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2020 இல் 1869 ஆக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று 2020 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 6417 முறைப்பாடுகளில் 853 முறைப்பாடுகள் அரசாங்க அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து போராட்டங்களை அடக்குவதற்கும், செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்வதற்கும் ஏதுவான மட்டுமீறிய அதிகாரங்களை அவரது அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியது. அதுமாத்திரமன்றி கடந்த ஆண்டு ஜுலை 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகாலநிலை பிரகடனம், ஜுலை 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் மேலும் நீடிக்கப்பட்டது.

அவசரகாலநிலை பிரகடனமானது சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கும் நீண்டகாலம் தடுத்துவைப்பதற்குமான அதிகாரங்களை பாதுகாப்புத்தரப்பினருக்கு வழங்குகின்றது. அதன்படி அவசரகாலநிலையின்கீழ் பொலிஸாரும், இராணுவத்தினரும் மக்களின் போராட்டங்களை முடக்குவதற்கு மிகையான படைப்பிரயோகத்தைப் பயன்படுத்தியதுடன் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தன்னிச்சையான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அதேபோன்று மக்கள் போராட்டங்கள் தொடர்பில் செய்தி திரட்டுவதற்குச்சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதன் மூலம் ஊடக சுதந்திரமும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2021 ஒக்டோபர் மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சட்டமறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கென ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற பெயரில் ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டதுடன், அச்செயலணியின் தலைவராக முஸ்லிம் விரோத அமைப்பான பொதுபலசேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். இந்நியமனமானது இச்செயலணியின் சட்டபூர்வத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் வலுப்படுத்தப்பட்ட சிங்கள – பௌத்த பேரினவாதக்கொள்கையானது நாட்டிலுள்ள இன, மத சிறுபான்மையின மக்களின் மதச்சுதந்திரம் புறக்கணிக்கப்படுவதற்கும், ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கும் வழிவகுத்தது.

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை ஜனாதிபதியின் மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 2000 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் வலிந்துகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளையும் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தல்களையும் இலங்கை அரசாங்கம் புறந்தள்ளியுள்ளது. கடந்தகால மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்னமும் உண்மை மற்றும் நீதிக்காகக் காத்திருக்கின்றனர் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Please follow and like us: