340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நள்ளிரவுடன் நிறைவு  

காலி மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சிமன்றத்தை தவிர்த்து நாடளாவிய ரீதியாக உள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் மாநகர ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்களிடம் பொறுப்பாக்கப்படும்.

மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், பொது நிர்வாக அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன சகல மாகாண ஆளுநர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் இடம்பெற்று, புதிய சபை தெரிவு செய்யும் வரை உள்ளூராட்சி மன்றத் நிர்வாகத்தை மாநகர ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் முன்னெடுப்பார்கள். இதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும்.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் பாவித்த அரச சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்கள் அனைத்தும் இன்றைய தினத்துக்குள் மாநகர ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

2018.02.10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி 34 உள்ளுராட்சி மன்றங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 உள்ளூராட்சிமன்றங்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 7 உள்ளுராட்சிமன்றங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 41 உள்ளூராட்சிமன்றங்களையும் கைப்பற்றியது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022.03.19ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது. இருப்பினும் நாட்டின் அப்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சின் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் பதவி காலத்தை ஒரு வருட காலத்திற்கு நீடித்தார். தேர்தல் பிற்போடப்பட்டமைக்கான காரணத்தை அவர் பாராளுமன்றத்துக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பாக்கப்பட்டது.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்தும் பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி 25 தேர்தல் நிர்வாக மாவட்டங்களுக்காக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து முன்னெடுத்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஆணைக்குழு பிற்போட்டது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கான பணிகளை மேற்கொள்ள நிதி விடுவிப்பு செய்யுமாறு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. இருப்பினும் நிதி நெருக்கடியால் மீண்டும் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

300 மில்லியன் ரூபா முற்பணம் வழங்கினால் தபால்மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிட்டு 6 நாட்களுக்குள் ஒப்படைக்க முடியும் என அரச அச்சகத் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 28,29,30 மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கெடுப்பு இடம்பெறும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொது வாக்கெடுப்பு இடம்பெறுவதும் நிச்சயமற்றதாக உள்ளது.

Please follow and like us: