நிதியை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுங்கள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான பணிகளுக்கு அரசாங்கம் அரச அச்சகத் திணைக்களத்தின் ஊடாக இடையூறு விளைவிக்கிறது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளை தவிர ஏனைய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும்,அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள், பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (14) காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் வாரம்  தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இவ்வார காலத்திற்குள் நிறைவுப் பெறவேண்டும், இருப்பினும் நிதி நெருக்கடியால் அச்சிடல் பணிகளை அரச அச்சகத் திணைக்களம் இடை நிறுத்தியுள்ளது.

திறைச்சேரி நிதி வழங்குவதை உரிய நேரத்திற்கு வழங்குவதை தாமதப்படுத்தினால் ஆணைக்குழுவினால் எவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சி செயலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளது.

வழங்கிய வாக்குறுதிக்கு அமைய உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவது நீதிமன்ற அறிவுறத்தலை புறக்கணிப்பதாக கருதப்படும்.

ஆகவே தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தை நாடுவது சிறந்த தீரவாக அமையும் என அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார ஆகியோர் அமைதியாக இருந்ததாக அறிய முடிகிறது.

தபால் மூல வாக்கெடுப்புக்கு கூட இந்த அரசாங்கம் தயார் இல்லை.அரசாங்கத்தின் அழுத்தத்தினால் அரச அச்சகத் திணைக்களம் அச்சிடல் பணிகளை இடைநிறுத்தியுள்ளது.திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நிதி நெருக்கடிக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாடுவதை தவிர மாற்று வழியேதும் தற்போது இல்லை,ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்தை நாட வேண்டும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எவ்வழியிலாவது பிற்போடும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

தேர்தல் முடிந்த பிறகு தான் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி உரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும்,ஆனால் அரச அச்சகத் திணைக்களம் நிதி ஒதுக்காத காரணத்தினால் அச்சக பணிகளை நிறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது, தேர்தல் பணிகளுக்கு அரச நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை அரச அச்சகத் திணைக்களம் மறந்து விட்டு செயற்படுகின்றமை கவலைக்குரியது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த யோசனைகளை பரிசீலனை செய்து வெகுவிரைவில் ஒரு தீர்மானத்தை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

Please follow and like us: