இறுதிப் போட்டிக்கும் ஸ்டீவ் ஸ்மித் தலைவர்

இந்தியாவுக்கு எதிரான இறுதி போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டிக்கான அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் தொடர்வார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர், பேட் கம்மின்ஸ் தாயகம் திரும்பிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியின் தலைவராகச் செயற்பட்டார்.

ஸ்டீவ் ஸ்மித் தலைவராக அணியை வழிநடத்திய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி லண்டன், ஓவலில் நடைபெறும் 2021-23 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது அவுஸ்திரேலியா.

எவ்வாறெனினும் மும்பையில் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின்போது, பேட் கம்மின்ஸ் அணிக்குத் திரும்புவாரா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

மார்பக புற்றுநோயால் நோய்த்தடுப்பு சிகிச்சையில் இருக்கும் தனது தாயாரான மரியாவை கவனத்திக் கொள்வதற்காக பேட் கம்மின்ஸ் டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் சிட்னி திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: