இலங்கையும் இந்தியாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

லங்கை மற்றும் இந்தியாவின் கலாசாரத்தை வேறுபடுத்த முடியாது. எனவே, இவ்விரு நாடுகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே காணப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடியால் வீழச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று (11) சனிக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த யாழ்.கலாசார நிலையம் இலங்கை – இந்திய மக்களுக்கு இடையிலான கலாசாரத்துடனான உறவில் பெரும்பங்கினை வகிக்கிறது.

இதனை போன்றே இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை என்பவற்றின் அபிவிருத்தி தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

கடும் பொருளாதார நெருக்கடிகளால், கடன் சுமையால் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ்.கலாசார நிலையம் ஒரு பொது நிலையமாகவே காணப்படும். இலங்கை மற்றும் இந்தியாவின் கலாசாரங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது.

எனவே தான் இவை இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நாம் பார்க்கின்றோம். இரு நாடுகளுக்கும் பொதுவான இந்த கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக இவ்வாறானதொரு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு உதவிய இந்திய பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

சுதந்திரத்தில் தமிழ் மக்களினதும் பங்குபற்றலை நினைவுகூரும் வகையிலேயே 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்திலும் ஏற்பாடு செய்தோம்.

நாளை புதிய பாதையில் பயணிக்க வேண்டும். நல்லிணக்கம், வடக்கின் அபிவிருத்தி குறித்து நான் இதற்கு முன்னரும் பேசியிருக்கின்றேன்.

அதற்கமைய நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே எமது கொள்கையாகும்.

எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ஒன்றாக நாட்டை கட்டியெழுப்புவோம். இது யாழ். மக்களின் கலாசார கேந்திரமாக திகழ வேண்டும்.

எனவே, இந்நிலையத்துக்கு ‘சரஸ்வதி மஹால்’ என பெயரிடுகிறோம். புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிப் பயணிப்போம் என்றார்.

Please follow and like us: