தொழிற்சங்க கூட்டமைப்பிற்கிடையில் விசேட கலந்துரையாடல்  

அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள புதிய வரி வசூலிப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கடந்த மூன்று வாரங்களாக பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்களினால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய இது தொடர்பில்நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தொழில்வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் ,

வரி வசூலிப்பு சட்டத்தில் ஒரு எழுத்தும் மாற்றப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டிலிருந்த அரசாங்கம் தற்போது , சில மாற்றங்களை செய்வதற்கு இணங்கியுள்ளது. போராட்டத்தின் காரணமாகவே அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை மாற்ற முடிந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் எம்மால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைகளுக்கு இதுவரையிலும் தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கும் , தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. எமது கோரிக்கைகளுக்கு ஸ்திரமான பதில் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியிருந்தோம்.

பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகள் காணப்படும் வரை இடைக்கால முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது. ஜனாதிபதியுடன் கலந்துரையாடி எமக்கான தீர்வினைவில் விரைவில் வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் உறுதியளித்துள்ளார்.

அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள வரி வசூலிப்பு சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் வரை எமது போராட்டங்கள் கைவிடப்பட மாட்டாது என்றார்.

Please follow and like us: