மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

நாளுக்கு நாள் உக்கிரமடையும் மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட வைத்திய உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் நிஸாந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.  சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட பல வைத்திய உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதனை கடந்த பல நாட்களாக நாம்  தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம். 1300 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மருந்து பொருட்கள் காணப்பட்ட போதிலும், இதில் 140 முதல் 150 வரையான சில அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.

அதேவேளை, நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும், இன்சுலின் இருதய நோயாளிகளுக்கான ஆஸ்பிரின் மருந்து வகைகள், மெட்பார்மின் மருந்து வகைகள், சிறு குழந்தைகளுக்கான சிரப் வகைகள்,  வலி நிவாரணி மருந்துகள், மயக்க மருந்துகள், புற்றுநோய் மருந்துகள்  மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான மருந்துகள் என மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.மேலும்  மூக்கு வழியாக செலுத்தும் குழாய்கள், சிறுநீர் குழாய்கள், இரத்தத்தினை பெற்றுக்கொள்வதற்கான குழாய்கள் போன்றவற்றிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும், தேவையான மருந்து பொருட்கள் கிடைக்காமையால் நோயாளர்கள் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தின் தலையீடு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.

சுகாதார அமைச்சானது இலக்கங்களில் மாத்திரம் 322 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுவது பயனற்றது. உண்மையில் ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்தி உடனடியாக தேவைப்படுகின்ற அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு  அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Please follow and like us: