உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிக்குமாறு இலங்கைக்கு பரிந்துரையுங்கள்

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள், அவர்களுக்கு உதவிசெய்தவர்கள், கட்டளையிடல் அதிகாரத்தின் அடிப்படையில் இத்தாக்குதல்கள் தொடர்பில் நேரடியாகப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ், புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளடங்கலாக உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைத் தடுக்காத அனைத்துத்தரப்பினருக்கும் உரியவாறான தண்டனைகளை வழங்கும்படி இலங்கை அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான பிரான்சிஸ்கன்ஸ் இன்டர்நெஷனல் மற்றும் சமூக, சமய நிலையம் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியைப் பாதுகாத்தல், மேம்படுத்தலை இலக்காகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான பிரான்சிஸ்கன்ஸ் இன்டர்நெஷனல் மற்றும் சமூகசேவை வழங்கல் அமைப்பான சமூக மற்றும் சமய நிலையம் ஆகிய ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்குக்கொண்டுவர விரும்புகின்றோம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்கள் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதுடன் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றது.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பன நியமிக்கப்பட்டன.

இவற்றில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதுடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பகுதியளவிலும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை முழுமையாகவும் பகிரங்கப்படுத்தப்பட்டது.

சமூக மற்றும் சமய நிலையத்தின் மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் 2023 பெப்ரவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்துமாறு தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவிட்டது.

இருப்பினும் அவ்வுத்தரவிற்கு அமைய வெளியிடப்பட்ட அறிக்கையிலுள்ள முக்கிய பரிந்துரைகள் எவையும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய நீதியை வழங்கும் வகையில் அமுல்படுத்தப்படவில்லை.

அதேபோன்று அரசினால் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், தற்போதுவரை அவ்வழக்குகள் தொடர்பில் இறுதித்தீர்ப்பு வழங்கப்படவில்லை.

எனவே உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரும் இதுவரையில் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை. அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரியவாறான இழப்பீடு முழுமையாகப் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இவையனைத்தையும் கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களும் இலங்கை அரசாங்கத்திற்கு சில பரிந்துரைகளை முன்வைக்கவேண்டும் என்று கோருகின்றோம்.

அதன்படி உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரிடம் அளிக்கப்பட்ட அனைத்து முறைப்பாடுகளையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள், அவர்களுக்கு உதவிசெய்தவர்கள், கட்டளையிடல் அதிகாரத்தின் அடிப்படையில் இத்தாக்குதல்கள் தொடர்பில் நேரடியாகப் பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.

அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ், புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளடங்கலாக உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களைத் தடுக்காத அனைத்துத்தரப்பினரும் தண்டிக்கப்படவேண்டும்.

இப்பரிந்துரைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைப்பதுடன் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புடைய நகர்வுகளை அடுத்த அறிக்கையிலும் ஆதாரங்களைத்திரட்டும் பொறிமுறையிலும் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us: