இலங்கையின் பொருளாதார பாதிப்பை பலம் வாய்ந்த நாடுகள் பயன்படுத்திக்கொள்ள போட்டி

இரகசியமான முறையில் அண்மையில் இலங்கை வந்து சென்ற அமெரிக்க குழுவினர்  இலங்கை வருவதற்கான வீசாவை கொண்டிருந்தார்களா என்றுகூட விமான நிலைய அதிகாரிகள் ஆராய்ந்திருக்கவில்லை.

இலங்கையின் பொருளாதார பாதிப்பை பலம் வாய்ந்த நாடுகள் பூகோள அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள போட்டிப் போட்டுக் கொள்கிறன.பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் விஜயத்தின் உண்மை காரணியை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  அமெரிக்க முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எங்களால் முன்வைக்கப்பட்ட யோசனையில் அமெரிக்க  இராஜாங்க  திணைக்களத்தின் அரசியல் விவகார உயர் அதிகாரியான விக்டோரியா நூலன்ட்டின் பெயரை குறிப்பிடுவதற்கு பாராளுமன்றத்தில் இடமளிக்காத நிலைமையே காணப்படுகின்றது. எதிர்க்கட்சி அலுவலகம் குறித்த பெயரை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஏன் அந்தளவுக்கு பயம்.

கடந்த 14 ஆம் திகதி அமெரிக்க அதிகாரிகள் 20 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் விசேட அதிதிதிகள் வழியிலேயே அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களிடம் வீசா உள்ளதா என்றுகூட பார்க்கவில்லை. இவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் போது விமான நிலையத்தில் இருந்து அதிவேக வீதி மற்றைய வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள் வருவதும் போவதும் வழமையே. ஆனால் இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது. விக்டோரியா நூலன்ட்டின் இலங்கை விஜயத்தின் பின்னர் இவ்வாறான சம்பவம் நடக்கின்றது. வெளிவிவகார அமைச்சு இதனை அறிந்திருக்கவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சே அறிந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

அரச புலனாய்வு அலுவலகத்திற்கு செல்லும் போது அங்கிருந்தவர்களின் ஆயுதங்களை கலைந்த பின்னரே குறித்த குழுவினர் அங்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த அதிகாரிகள் ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். ஏன் இப்படி செய்ய வேண்டும். அது அச்சுறுத்தலானது என்பதுடன் சந்தேகங்களுக்கு உரியது.

நாடு பாரிய பொருளதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தை கொண்டு நாட்டுக்கு எதிராக பாரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.அமெரிக்காவின் முதனிலை பாதுகாப்பு அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

Please follow and like us: