மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமுகமளிக்கத் தவறிய அதிகாரிகள்  

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் சமூகமளிக்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருந்த விசாரணைகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இது தொடர்பான முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த விசாரணையின் போது தீர்மானம் எடுக்கக் கூடிய மட்டத்திலான அதிகாரிகள் சமுகமளிக்காமையின் காரணமாக முறைப்பாடு குறித்த விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு துரிதமாக தலையீடு செய்ய வேண்டிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினை காண்கிறது.

அதற்கமைய காலம் தாழ்த்தப்படாமல் அதியுயர் முன்னுரிமையளித்து இந்த மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக மேற்குறிப்பிட்டப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டின் முறைப்பாட்டாளர்களான வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை வைத்திய சங்கம் என்பன காணப்படுகின்றன.

Please follow and like us: