நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டாமல் எவராலும் நாட்டை ஆள முடியாது

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மார்ச் இறுதிக்குள் இணக்கப்பாட்டை எட்டுவதற்கே முயற்சிக்கின்றோம். சீனா அதற்கான நிதி உத்தரவாதத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறன்றி நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டாமல் எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடன் மறுசீரமைப்புக்கள்இன்றி கடன் உதவியை வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் காணப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் நிபுணத்துவம் மிக்க அதிகாரிகள் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் என்பன சாதகமான பதிலை வழங்கியுள்ளன. அதே போன்று சீனாவும் 2 வருட கால அவகாசம் என்ற சாதகமான பதிலை வழங்கியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த கால அவகாசம் போதாது என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி , திறைசேரி மற்றும் மத்திய வங்கி அதிகாரிகள் எவ்வாறேனும் மார்ச் இறுதிக்குள் இதனை நிறைவடையச் செய்வதற்கு பெரும்பாடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சி வெற்றியடையாமலிருக்க முடியாது.

மாறாக வெற்றியடையாவிட்டால் யார் வந்து எந்த வழியில் நாட்டை முன்னேற்றுவதாகக் கூறினாலும் அதனை செய்ய முடியாது. இந்ந வேலைத்திட்டங்களை வெற்றியடைச் செய்யாமல் எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்றார்.

Please follow and like us: