பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுக்கு விரைவில் புதிய நடைமுறை!

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தெரிவு முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதனால் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோருவதை மறுஅறிவித்தல் வரை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக் கழகங்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பால், யாழ்ப்பாணம் மற்றும் களனி பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவிக்காக இம்மாத தொடக்கத்தில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள் இரத்துச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவி நியமனத்துக்காக நடைமுறையில் இருக்கும் சுற்று நிருபம் மீளாய்வு செய்யப்பட்டு, புதிய நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதனால், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோருவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் ஆரம்பிக்க வேண்டாம் எனவும், புதிய நடைமுறைகள் கொண்ட சுற்றுநிருபம் வெளிவந்த பின்னர் அதன் அடிப்படையில் விண்ணப்பங்களைக் கோருமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பல்கலைக் கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கு 2020 ஆம் ஆண்டு வரை, அந்தந்தப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பு முறை மூலம் முன்மொழியப்படும் மூவரில் ஒருவரை பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் படி ஜனாதிபதி தெரிவு செய்வார். அதன் பின் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த – தற்போது வரை நடைமுறையில் இருந்து வந்த சுற்று நிருபத்தின் படி, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் திறமை அடிப்படையில் முதல் ஐந்து பேரை தகுதி வாய்ந்த துறைசார் நிபுணர்களைக் கொண்ட மதிப்பீட்டுக் குழு தெரிவு செய்து பேரவைக்குப் பரிந்துரை செய்யும். அந்த ஐவரில், அவர்களின் தகுதி, தராதரங்களின் படி – புள்ளி வழங்கப்பட்டு முன்னிலை பெறும் மூவரின் பெயர்கள் ஜனாதிபதியின் தெரிவுக்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும். முன்மொழியப்படும் மூவரில் ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி அறிவிப்பார்.

இந்த நடைமுறைகளின் படி, பதவியில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைப் பகிரங்கமாகக் கோருதல் வேண்டும். இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மற்றும் களனி பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் தமது பதவிக் காலத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு செய்ய இருப்பதனால் – பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us: