இத்தாலியின் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த படகுகளிலிருந்து 1000க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் மீட்பு  

இத்தாலியின் தென்பகுதி கடற்கரைப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பல மீட்பு நடவடிக்கைகளின் போது நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 74 பேர் உயிரிழந்து இரண்டுவாரங்களிற்கு பின்னர் இந்த மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு படகில் இருந்த 500 குடியேற்றவாசிகளை உயிருடன் தங்கள் கப்பல் ஒன்று மீட்டது என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது.

இன்னொரு கப்பல் 379 பேரை மீட்டுள்ளது அவர்கள் கரைக்கு கொண்டுவரப்படுவார்கள் என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது.

மோசமான கடல்நிலை மற்றும் படகுகளில் பெருமளவு நபர்கள் காணப்பட்டதால் மீட்பு நடவடிக்கைகள் கடினமானவையாக காணப்பட்டன என இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

487 பேருடன் படகொன்றை குரோடோனோ துறைமுகத்திற்கு கொண்டுசெல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us: