மயந்த திஸாநாயக்க அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக் குழுவில் இருந்து விலக வேண்டும்

அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு மயந்த திஸாநாயக்கவின் பெயரை ஆளும் தரப்பு பரிந்துரை செய்துள்ளதால் தெரிவு குழுவின் சுயாதீனத்தன்மை தொடர்பில் சந்தேகம் தோற்றம் பெறும்.

ஆகவே   அவர்  அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவில் இருந்து விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சபையில் வலியுறுத்தினார்.

சபாநாயகர் தலைமையில் 23 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.

அரச நிதி தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதால் அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் போது முறையான ஒரு கட்டமைப்பு காணப்படும் என்பதால் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைமைத்துவம் எதிர்க்கட்சிக்கு  வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்கள்.

மறுபுறம் ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியின் உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அவரை ஆளும் தரப்பினர் பரிந்துரை செய்துள்ளதால் அவர் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவார் என்ற நிலைப்பாடு தோற்றம் பெறும்,

அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவின் தலைவர் பதவி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க  அரசாங்க நிதி தொடர்பான தெரிவு குழுவில் இருந்து விலக வேண்டும். அதன்பின்னர் எதிர்க்கட்சிகளின் பரிந்துரைக்கு அமைய ஹர்ஷ டி சில்வாவை  தலைவராக நியமிக்க முடியும் என்றார்.

Please follow and like us: