அதிக விலைக்கு முட்டை விற்பனைசெய்தால் சட்ட நடவடிக்கை  

முட்டை விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கின்றோம். ஜா எல பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட முட்டை களஞ்சியசாலை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என நுகர்வோர் நடவடிக்கை தொடர்பான அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி  ஷான்த்த நிரியெல்ல தெரிவித்தார்.

நுகர்வோர் நடவடிக்கை தொடர்பான அதிகாரசபையில் நேற்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜாஎல பிரதேசத்தில் களஞ்சியசாலை ஒன்றில் முட்டை பதுக்கிவைத்தருப்பதாக நுகர்வோர் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நேற்று முன்தினம் அதிகாரசபையினர் குறித்த களஞ்சியசாலையை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். அதன் பிரகாரம் களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நேற்றைய தினம் நீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதன் பிரகாரம் உரிமையாளருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அதிகாரசபைக்கு கட்டளை இட்டுள்ளது.

அதன் பிரகாரம் தற்போது குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன் அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் அதிகாரசபைக்கு சட்டத்தினால் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமையவே மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் யாருடைய தனிப்பட்ட நோக்கத்துக்காக மேற்கொள்வதில்லை.

அத்துடன் முட்டைக்கான சில்லறை விலையாக வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 46 ரூபா எனவும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் குறித்த விலையைவிட அதிக விலைக்கு யாராவது முட்டை விற்பனை செய்வதாக முறைப்பாடு கிடைத்தால் அவருக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவோம்.

அதேநேரம் முட்டை உற்பத்திக்கான மூலப்பாெருட்களின் விலை  பாரியளவில்  குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் வியாபாரிகள் நுகர்வோரிடமிருந்து அதிக இலாபத்தை பெற்றுவருவதை அனுமதிக்க முடியாது.

அத்துடன் முட்டை உற்பத்தி அதிகரிக்கப்பட்டால் இந்த நிலை ஏற்படாது. அதனால்தான் அரசாங்கம் முட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லாமல் போகும் என எதிர்பார்க்கிறோம். அதுவரைக்கும்  நிலையை கட்டுப்படுத்திக்கொள்ளவே நிர்ணய விலை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

Please follow and like us: