தேர்தலுக்கு தேவையான பணத்தை நிதி அமைச்சு வழங்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மொத்த நிதியை, நிதி அமைச்சினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்காவிட்டால் அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை நிதி அமைச்சினால் இதுவரை வழங்காமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு செலவாகும் பணத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குவது நிதி அமைச்சின் கடமையாகும். இந்த நிதியை ஒரே தடவையில் தேர்தல் ஆணைக்குழு கோரியதில்லை. என்றாலும் இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போது ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெற்றுக்கொடுப்பது நிதி அமைச்சின் பொறுப்பாகும்.

அதனால், தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள உரிய பணத்தை நிதி அமைச்சினால் ஆணைக்குழுவுக்கு வழங்காவிட்டால் அது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி விளக்கமளிப்போம்.

அத்துடன் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதன் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் 8 மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளன என்றார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு உரிய அச்சிடும் நடவடிக்கைகளுக்காக கோரிய மொத்த பணம் இதுவரை கிடைக்கவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கு உரிய பத்திரங்கள் தற்போது அச்சிடப்படுவதாக அரசாங்க அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் தபால் மூல வாக்கு பத்திரங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி தபால் திணைக்களத்துக்கு ஒப்படைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது. அதன் பிரகாரம் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் அச்சிடப்படும் குறித்த பத்திரங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தபால் வாக்கு பத்திரங்கள் அடங்கிய பாதுகாப்பு பொதி, எதிர்வரும் 16ஆம் திகதியில் இருந்து விநியோகிப்பதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Please follow and like us: