மின்கட்டண உயர்வு நீதிமன்றை நாடுவேன்

மின்கட்டணத்தை புதன்கிழமை (15) முதல் அமுலாகுவகையில் 65 சதவீத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் அரசியல் அழுத்தங்களால் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நியாயமற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,  தெரிவித்தார்.

தடையில்லா மின் விநியோகத்துக்காக வருடாந்தம் 287 பில்லியன் ரூபாய் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மின்கட்டணத்தை  65 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது என்று குறிப்பிட்டார்.

மக்களின் பொருளாதார சிக்கல்களை கருத்திற் கொண்டு 36 சவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரித்து 142 பில்லியன் ரூபாய் வருமானம் பெறும் வகையில், அனுமதி வழங்க ஆணைக்குழு தீர்மானித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் சட்டத்துக்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு எதிராகவும் ,மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக மின்சார சபையின் அதிகாரிகள், பாராளுமன்றத்தில் தேசிய பேரவைக்கு செவ்வாய்க்கிழமை (14) அறிவித்திருந்தனர்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை கூடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்ப்பதாக இதன்போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: