விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வழங்கிய உதவிகள்!

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் குவெட்டாவின் கட்டளை, பணியாளர்கள் கல்லூரியில் பயின்ற இலங்கை பட்டதாரிகளுக்கிடையே மற்றுமொரு ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்துபசார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

பாகிஸ்தான் கூட்டுப்படைத்தலைவர்கள் குழுவின் பிரதானி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவின் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இராப்போசன விருந்தில் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூத்த பட்டதாரியுமான ஓய்வுபெற்ற அட்மிரல் ஜெயந்த் பெரேரா இந்நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், முன்னாள் மாணவர்களுக்கு கூட்டுத்தலைவர்கள் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து கருத்துரைத்த அவர், எப்போதும் இருநாடுகளும் வலுவான உறவைப் பேணிவருவதாகக் குறிப்பிட்டார். இராணுவ மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்கமுடியாது என்றும் குறிப்பிட்ட அவர் பழைய மாணவர் சங்கங்களின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாகிஸ்தான் கூட்டுப்படைத்தலைவர்கள் குழுவின் பிரதானி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா உரையாற்றுகையில், ‘இலங்கையுடனான நெருக்கமான நல்லுறவு குறித்து பாகிஸ்தான் எப்போதும் பெருமையடைகின்றது. இருநாடுகளும் மிக நீண்டகாலமாக நெருங்கிய ஒத்துழைப்பினைப் பேணிவருகின்றன. அதேவேளை இருதரப்பு உறவுகள் மேலும் வளர்ச்சியடைந்திருப்பது மகிழ்ச்சிகரமான விடயமாகும்’ எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாகப் பாதுகாப்புத்துறையில் இலங்கையும் பாகிஸ்தானும் தொடர்ந்து நெருக்கமானதும், சுமூகமானதுமான நல்லுறவைப் பேணிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘இரு நாடுகளும் நெருக்கடியான காலங்களில் பரஸ்பரம் உதவிகளை வழங்கியுள்ளன. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவானது பரஸ்பர நம்பிக்கை மற்றும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையைப் பேணுதல் போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டது.

இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆதரவளித்து வருகிறது’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் பர்கி, பாகிஸ்தானும் இலங்கையும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ள இரு நாடுகளாகும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற, எப்போதும் நிலைத்திருக்கின்ற நல்லுறவைப் பாராட்டிய அவர், கடந்த காலங்களில் இராணுவப்பயிற்சி மற்றும் உதவிகள் மூலம் இலங்கை ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்தியது போன்று தற்போதும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயற்படத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

Please follow and like us: