ஹஜ் முகவர்கள் நியமிக்கப்படவில்லை கடவுச்சீட்டு, முற்பணம் செலுத்த வேண்டாம்

2023ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இதுவரை முகவர்கள் நியமிக்கப்படவில்லை.

எனவே, முகவர்களிடம் கடவுச் சீட்டையோ, முற்பணத்தையோ வழங்கவேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, திணைக்களத்தின் அறிவிப்பின்றி மேற்கொள்ளும் கொடுக்கல் – வாங்கல்களை திணைக்களம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமை தொடர்பில் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸல் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை எந்தவொரு ஹஜ் முகவர்களையும் 2023ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகைக்கான முகவர்களாக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என்பதை அறியத்தருகிறேன்.

எனவே, 2023ஆம் ஆண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்ற விரும்புபவர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை எந்தவொரு முகவர்களிடமும் கடவுச் சீட்டையோ, முற்பணத்தையோ வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும், திணைக்களத்தின் மேற்படி அறிவிப்பின்றி மேற்கொள்ளும் எந்தவித கொடுக்கல் – வாங்கல்களுக்கும் திணைக்களம் பொறுப்பேற்காது என்பதை அறியத் தருகின்றேன் என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் பைஸல் மேலும் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: