மெஸ்ஸிக்கு துப்பாக்கிதாரிகள் எச்சரிக்கை  

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் மனைவியின் குடும்பத்துக்கு சொந்தமான ஆர்ஜென்டீனாவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கிதாரிகள் மெஸ்ஸிக்கு எழுத்துபூர்வமான செய்தியில் எச்சரிக்கை விடுத்ததாக ஆர்ஜென்டீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸியின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸ்ஸோவின் குடும்பத்திற்கு சொந்தமான நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ரொசாரியோவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வியாழன் அதிகாலையில் குறித்த பல்பொருள் அங்காடி மீது பத்து தடவைகளுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அங்கிருந்த அட்டைப் பெட்டியொன்றில் “மெஸ்ஸி, நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். ஜாவ்கினும் ( நகர மேயர்) போதைப்பொருள் கடத்தல்காரன், அதனால் அவன் உன்னைக் கவனிக்க மாட்டான்” என்று எழுதியும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் மெஸ்ஸி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரராக பலரால் கருதப்படும், மெஸ்ஸி அர்ஜென்டினாவில் மதிக்கப்படும் நபர்களில் ஒருவராவார்.

குறிப்பாக டிசம்பர் மாதம் கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் வெற்றிக்காக தேசிய அணியை வழிநடத்தியவர் அவர்.

மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணிக்காக விளையாடுகிறார், மேலும் அவர் தனது பெரும்பாலான நேரத்தை வெளிநாட்டில் செலவிடுகிறார்.

Please follow and like us: