23 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் யுவதி கைது!  

23 கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே  இந்த யுவதி  கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்)  சுதத்த சில்வா தெரிவித்தார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-650 விமானத்தில் இன்று (28)  காலை 08.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவரது  பயணப்பையை சோதனையிட்டபோதே கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கொக்கேய்ன் கரைசலில் கொக்கேய்ன் போதைப்பொருள் செறிவு அதிகமாக காணப்படுவதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த யுவதியிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Please follow and like us: