15 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி நால்வர் பிணையில் விடுதலை

காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி, அரசியல் கைதி கந்தையா இளங்கோவிற்கு பிணை வழங்கியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி காலி தெற்கு கடற்படை முகாமை தாக்கி, கடற்படையை சேர்ந்த கனக சுரங்கவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன், 22 பேருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி கொலை செய்வதற்கு எத்தனித்ததாக 23 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காலி மேல் நீதிமன்றில் 2010 ஆம் ஆண்டு நான்கு எதிரிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் முதலாம் எதிரி கந்தையா இளங்கோ உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கால கட்டமான 2009 இல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவிற்கு எதிராக எதிரிகளால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும், 77 சாட்சிகளும் 27 தடயப்பொருட்களும் குற்றச்சாட்டுப்பத்திரத்தில் அரச தரப்பு சான்றாக பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.

முதலாம் எதிரியின் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது பிணை மனு சமர்பணத்தில் முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவினால் வழங்கப்பட்டதாக அரச தரப்பில் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் உண்மை விளம்பல் விசாரணையில் 21.06.2018 ஆம் ஆண்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டு 5 வருடங்கள் அண்மிக்கின்றது.

அத்துடன், 2009ஆம் ஆண்டு விமானப்படையின் குண்டு வீச்சினால் எதிரி தனது வலது காலை இழந்ததுடன், கடந்த 15 வருடங்களாகியும் விசாரணை முற்று முழுதாக நிறைவடையாது சிறையில் வாடுவதனையும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி, முதலாம் எதிரியான கந்தையா இளங்கோவிற்கு இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளார்.இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் மொகமட் பாரி முன்னிலையானதுடன், முதலாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி தர்மராசாவின் அணுசரனையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா முன்னிலையானார்.

Please follow and like us: