மாசி 5, 2023

கமல்ஹாசனை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

 “கமல்ஹாசனின் ரத்தத்தில், தேசியமும் காங்கிரஸும் கலந்திருப்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு அவர் ஆதரவு தரவேண்டும் என்று கோரினேன். கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவர் கூறினார்” என்று ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற எனக்கு அவர் ஆதரவு தரவேண்டும். திமுக கூட்டணியில் அவர் சேர வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை அவரிடம் கூறினேன். கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவர் கூறினார்.

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், கமல்ஹாசனின் ரத்தத்தில், தேசியமும் காங்கிரஸும் கலந்திருப்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய தந்தை காங்கிரஸ் கட்சியில் தியாகியாக இருந்தவர். மறைந்த தலைவர் காமராஜருக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர்.

எனவே, காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை. இருப்பினும் அவர் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டோம். நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளார். ஒரு நல்ல முடிவை அறிவிப்பார். அதோடு மட்டுமின்றி, அவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். கண்டிப்பாக அதை அவர் செய்வார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
Please follow and like us: