தொழிற்சங்க போராட்டத்தினால் அத்தியாவசிய சேவைகள் முற்றாக முடங்கவில்லை

புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி , சுகாதாரம் , புகையிரதம் , மின்சாரம் , பெற்றோலியம் , துறைமுகம் உள்ளிட்ட பல சேவைகளைச் சார்ந்த துறைகள் இன்று  புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன. எவ்வாறிருப்பினும் இந்த சேவைகளை முற்றாக முடங்கவில்லை என்றும் , மக்களுக்கான சேவைகள் தடையின்றி வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஒவ்வொரு துறைசார் பிரதானிகளை குறிப்பிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

புகையிரத சேவைகள்

தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று (15) காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தினார்.

வங்கி சேவைகள்

இலங்கை வங்கியின் தலைமையகம் உள்ளிட்ட 265 கிளைகளில் வழமை போன்று சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ருசெல் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் வங்கியின் 352 கிளைகளில் 330 கிளைகளில் 75 சதவீத ஊழியர்களின் வருகையுடன் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் தடையின்றி வழங்கப்பட்டதாக மக்கள் வங்கியின் பதில் முகாமைத்துவ பணிப்பாளர் கிளைவ் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

மின்சாரசபை

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒத்துழைக்கும் நோக்கில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் தாம் ஈடுபடவில்லை என இலங்கை மின்சாரசபை காசாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பெற்றோலியம்

வழமையான அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நேற்று முற்பகல் வரை 6,600 லீற்றர் கொள்ளளவு கொண்ட 300க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் பவுசர்கள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

இலங்கை போக்குவரத்துசபை

இலங்கை போக்குவரத்து சபையின் 107 டிப்போக்களிலும் நேற்றை தினம் வழமை போன்று கால அட்டவணையின் படி பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. இங்கு காணப்படும் 8 தொழிற்சங்கங்களில் ஜே.வி.பி.யின் ஒரு தொழிற்சங்கம் தவிர்ந்த ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியதாக போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

Please follow and like us: