சுற்றிவளைத்த சாரதிகள்! இலங்கையில் ஜேர்மன் பெண்ணுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவம்  

இலங்கையில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலரால் தாம் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக ஜேர்மன் சுற்றுலாப் பயணியொருவர் வெளியிட்ட காணொளியொன்று வைரலாகி வருகிறது.

மாத்தறையில் வைத்து போக்குவரத்து சேவையை வழங்கும் செயலியினூடாக பதிவு செய்யப்பட்ட நிலையில் வருகை தந்த முச்சக்கரவண்டியில் தாம் பயணிக்க முயன்றதற்காக சாதாரண முச்சக்கர வண்டி சாரதிகள் தன்னையும், நண்பர்கள் குழுவையும் துன்புறுத்தியதாக குறித்த சுற்றுலாப்பயணி குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த பெண் கடந்த 18ஆம் திகதி பேருந்து மூலம் மாத்தறைக்கு வந்ததாகவும், மிரிஸ்ஸ கடற்கரைக்குச் செல்வதற்காக செயலியொன்றின் ஊடாக முச்சக்கரவண்டியை பதிவு செய்த நிலையில் அது வந்ததையடுத்து முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்ட போது, சாதாரண முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவொன்று தம்மை தடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சாதாரண முச்சக்கரவண்டி சாரதிகளால் தானும் தனது நண்பர்களும் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கொமிசன் தொகையொன்றை வழங்கிய பின்னரே தாம் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணி என்ற வகையில் இலங்கையில் இது ஒரு விரும்பத்தகாத அனுபவமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில் காலியிலும் இவ்வாறதொரு சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Please follow and like us: