பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துங்கள்

அரசாங்கத்தினால் தற்போது நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதைய நிதி அமைச்சின் செயலாளருக்கு சிறை செல்ல வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் , ஜனாதிபதி ஊடகப்பிரிவு அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்பதைப் போன்றே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.

இது தமது ஊடகப்பிரிவை பிரசித்தப்படுத்துவதற்கான போராட்டம் அல்ல என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை கொள்கை ரீதியில் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தற்போது அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை நியாயமானதல்ல.

எனவே நல்லாட்சி அரசாங்கத்தில் அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய வரிக்கொள்கையை தற்போது நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கையை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதாகக் கூறி வரி மற்றும் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் தற்போது இலாபமீட்டும் அரச நிறுவனங்கள், திணைக்களங்களைக் கூட விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எமக்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுத்த லிபரல் ஜனநாயகவாதியான ரணில் விக்கிரமசிங்க இறந்துவிட்டார். தற்போது பிறந்திருப்பது சர்வாதிகாரியான ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுமாறு வலியுறுத்துகின்றோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதைய நிதி செயலாளர் நிச்சயம் சிறை செல்வார் என்றார்.

Please follow and like us: