உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுங்கள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்கள் விநியோகிக்கப்படாமை ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.

இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பில் உரித்தாக்கப்பட்டுள்ள கடமையாகும்.

எனவே அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர மக்கள் கூட்டணி , பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாபா, விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ விதாரண, அத்துரலியே ரத்ன தேரர், டிலான் பெரேரா, உதய கம்மன்பில, நாலக கொடஹேவா, பியங்கர ஜயரத்ன, சரித ஹேரத் மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தேசிய தேர்தலான உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்கு சீட்டுக்கள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை விநியோகிக்கப்படவிருந்தது.

எனினும் குறித்த தினத்தில் அதனை விநியோகிக்காமல் காலம் தாழ்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் , நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.

குறித்த வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதியை திறைசேரி வழங்காமல் இருக்கின்றமை , அந்த தீர்மானத்திற்கமைய அரச அச்சகம் வாக்கு சீட்டுக்களை விநியோகிக்காமல் இருக்கின்றமை மற்றும் தபால் வாக்குசீட்டுக்கள் விநியோகம் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை என்பவற்றை ஊடகங்களில் செய்திகள் மூலம் அறியக்கிடைத்தது.

இந்த தீர்மானங்களினால் நாட்டின் ஜனநாயகம் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் பிரஜை என்ற ரீதியிலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நியாயமற்ற ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாட்டினை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்பதோடு , அரசியலமைப்பில் மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் எமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமையுமாகும்.

அதற்கமைய நிலையியற் கட்டளை 16 இன் கீழ் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உங்களிடமும் சபாநாயகரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: