தற்போதைய நிலையில் தேர்தலை நடத்துவது ஜனநாயகமல்ல  

பொருளாதாரம் ஸ்திரமடைந்ததன் பின்னரே எத்தேர்தலையும் நடத்துவோம், தற்போதைய நிலையில் தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல,அரசியலமைப்பு, சட்டம் ஆகியவற்றை காட்டிலும் நாட்டு மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு முன்னுரிமை வழங்குவோம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த தவறான பொருளாதார கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை அன்றும் குறிப்பிட்டோம், இன்றும் குறிப்பிடுகிறோம் என்றும் குறிப்பிடுகிறோம், பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள போது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்த போது எந்த எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.

நாடு எதிர்கொண்ட மோசமான நெருக்கடியை கருத்திற்கொண்டு தனி நபராக இருந்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார், கடந்த ஆறு மாத காலத்தில் அவர் எடுத்த கடுமையான தீர்மானங்களினால் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள்.

எங்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் என்பதை கணித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றிணையவில்லை, நாட்டு மக்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து தற்போது வெற்றிப்பெற்றுள்ளோம்.

தற்போதைய நெருக்கடியான நிலையில் தேர்தலை நடத்தினால் அரசியல் கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது, பொருளாதார பாதிப்பு மீண்டும் தீவிரமடையும் என்பதை எதிர்தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், தேர்தலுக்கு நாங்கள் அச்சமில்லை, ஆனால் தற்போது தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதன் பின்னர் எத்தேர்தலையும் நடத்த தயாராக உள்ளோம், அரசியலமைப்பு, சட்டம் ஆகியவற்றை காட்டிலும், நாட்டு மக்கள் உயிர்வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு, அந்த பொறுப்பை அரசாங்கம் செயற்படுத்துகிறது.

குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு எதிர்தரப்பினர் தற்போது போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளார்கள். தொழிற்சங்க போராட்டத்தினால் அரசியல் ரீதியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

Please follow and like us: