அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும்  

மக்கள் ஆணையின்றி அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முயற்சித்தால் நாட்டில் இரத்தக் களரி ஏற்படும் நிலைமையே உருவாகும். அதனால் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ளுங்கள் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தலுக்கு அஞ்சும் அரசாங்கம், அதனை தடுப்பதற்காக பல்வேறு தந்திரங்களை மேற்கொள்கிறது. இந்நிலையில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விநியோகிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்திற்கு தாமதித்தாவது அரசாங்கம் சென்றுள்ளது. இதன்போது 15 விடயங்களுக்கு இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்த 15 விடயங்களும் என்ன என்று தெரியவில்லை.

தற்போது சௌபாக்கிய நோக்கு செயற்படுத்தப்படுகின்றனவா? அரச நிறுவனங்களை விற்கும் செயற்பாடுகளே நடக்கின்றன. இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது. இப்படி இருந்துகொண்டு அதனை செய்ய முடியுமா? தனியார் மயப்படுத்துவதென்றால் மக்களிடம் அனுமதி பெற வேண்டும். இவற்றை பாதுகாக்கவே மக்கள் ஆணை கிடைத்தது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக இருந்தால் அதற்கு மக்கள் ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. அதனால்தான் தேர்தல் ஒன்று தேவை என்கிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்தி உங்கள் வேலைத்திட்டங்களை முன்வையுங்கள். அப்போது மக்கள் எந்த பக்கம் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.. மக்கள் ஆணை இன்றி இதனை செய்யப் போனால் நாட்டில் இரத்தக் களரி ஏற்படும் நிலைமையே உருவாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது மக்கள் ஆணையாக அமையாது. மக்களிடம் கேட்க வேண்டும். தேர்தலுக்கு அஞ்ச வேண்டாம். மக்களுக்கு சரியான பக்கத்தை தெரிவு செய்ய இடமளிக்க வேண்டும்.

அத்துடன் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் தேர்தல் ஒன்று தேவையா என ஆங்கில பத்திரியை ஒன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 75வீதமனவர்கள் தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவித்திருக்கின்றனர். இதுதான் மக்கள் ஆணை என்றார்.

Please follow and like us: