தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் – ஆசிய அமைப்பு கண்டனம்

இலங்கையில் தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் குறித்து ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான அன்பிரெல் கவலை வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களிற்கு முன்னர் இடம்பெற்றிருக்கவேண்டிய உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடுவதற்கு இடம்பெறும் பல முயற்சிகள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக அன்பிரெல் தெரிவித்துள்ளது.

2022 மார்ச் 20 திகதி இடம்பெற்றிருக்கவேண்டிய தேர்தல்கள் ஒரு வருடகாலத்திற்கு மேல் பிற்போடப்பட்டன இறுதியாக மார்ச் 9 ம் திகதி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது என ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் தேர்தலை குழப்பும் விதத்தில் சமீபத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து நாங்கள் கவலைவெளியிடுகின்றோம், என தெரிவித்துள்ள ஆசிய அமைப்பு தேர்தலை குழப்புவதற்காக இடம்பெற்ற பல நடவடிக்கைள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக தபால்மூல வாக்களிப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிற்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள் குறித்து நாங்கள் கலக்கமடைந்துள்ளோம்,அவர்கள் பதவிகளில் இருந்து விலகவேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன எனவும் அன்பிரெல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் எனவும் அன்பிரெல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திரமான நீதியான தேர்தலிற்கான உரிமை என்பது அடிப்படை உரிமை இதில் தலையிடுவதற்கான எந்த முயற்சியையும் கடுமையாக கண்டிக்கவேண்டும் எனவும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தாமதிக்காமல் உரிய திகதியில் தேர்தல் இடம்பெறுவதை இலங்கை உறுதி செய்யவேண்டும் என ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Please follow and like us: