நிதிப் பிரச்சினைக்கு தீர்வை வழங்கினால் தேர்தலை நடத்தத் தயாரா ?  

தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கத்தினால் சுட்டிக்காட்டப்படும் நிதிப் பிரச்சினைக்கு ஏதேனும் தரப்பினர் தீர்வை வழங்கினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தயாரா என பெப்ரல் அமைப்பு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

விடயத்திற்கு  பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இதற்கான பதிலை எதிர்பார்ப்பதாகவும் பெப்ரல் அமைப்பு சுட்க்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி பிரதமருக்கு வெள்ளிக்கிழமை (17) அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

எவ்வித சட்ட ரீதியான அடிப்படை காரணமும் இன்றி காலவரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் நீங்கள் பிரதமாக பதவி வகிக்கும் அரசாங்கம் செயற்படுவதாகவே தோன்றுகிறது.

ஜனநாயகத்திற்காகவும் , நாட்டின் நன்மையான மறுசீரமைப்பிற்காக முன்னிற்க வேண்டிய தலைவரான நீங்கள் பிரதமராகப் பதவி வகிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

வெற்றி தோல்வி இரண்டையும் அனுபவித்துள்ள , சர்வஜன வாக்குரிமையின் பெறுமதியையும், அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளையும் நன்கு அறிந்த தலைவர்களான ஜனாதிபதியும் , நீங்களும் தலைமைத்துவம் வகிக்கின்ற போதிலும் , சட்டத்துக்கு புறம்பாக மக்களின் இறையாண்மையை பறிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை கவலைக்குரியது.

நாட்டின் நன்மைக்கு மிகவும் இன்றியமையாத காரணிகளான அரசியலமைப்புசபை, நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையிலான சமநிலை சீர்குலையும் வகையில் செயற்படுவதன் ஊடாக அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டால் , எவ்வாறான குறைபாடுகள் காணப்பட்டாலும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் ஓரளவு நற்பெயரைப் பெற்ற ஒரு அரசாக, உலகின் முன் நாம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

அத்தோடு மக்களுக்கு அமைதியாக தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குள்ள ஜனநாயக கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தால் அதன் ஊடாக ஏற்படக் கூடிய பாதகமான பிரதிபலன்களுக்கான பொறுப்பு கூறலிலிருந்து உங்களால் தப்ப முடியாது.

தற்போது எல்லை நிர்ணயம் உள்ளிட்ட தேர்தல் மறுசீரமைப்பிற்கான பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் உங்களிடமிருந்து பதில்களை எதிர்பார்க்கின்றோம்.

தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கம் சுட்டிக்காட்டும் நிதிப் பிரச்சினைக்கு ஏதேனும் தரப்பினர் தீர்வை வழங்கினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாரா?

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணயம் மூலம் தொகுதிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்து என்ன தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது?

புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதாவது 4000 அல்லது 5000 ஆகக் குறைக்கப்படும்போது, தற்போதுள்ள பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவங்களுக்கான ஒதுக்கீடுகள் இரண்டும் தலா 25 சதவீதம் என உள்ளடக்கப்படுமா? அதற்கு தேவையான அனுமதிகள் பெறப்பட்டதா?

ஏற்கனவே தொடங்கப்பட்ட மக்கள் சபை வேலைத்திட்டமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? அதற்கான திட்டம் உள்ளதா? என்ற கேள்விகளுக்கான பதில்களை நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

உள்ளூராட்சிமன்றத்  தேர்தலை தாமதப்படுத்தும் கருவியாக தற்போது இந்த நேர்மறையான சீர்திருத்தங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நாம் காண்கிறோம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என நம்புகின்றோம்.

அதற்காக நாம் அமைப்பின் அரசாங்கத்திற்கு பூரண ஆதரவை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். எனினும் பொருளாதார காரணியை முன்வைத்து ஜனநாயகத்தையும் மக்கள் இறைமையையும் சீர்குலைக்கும் நிறைவேற்றதிகாரத்தின் முயற்சிகளை முறியடிக்க தலையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறில்லை எனில், வருங்கால ஆட்சியாளர்கள் இதை மிகத் தவறான முன்னுதாரணமாகப் பயன்படுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: