ஏப்ரல் 25 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறாது  

ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறாது. 2024 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். தேர்தலை பிற்போட்டு மக்களாணையை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்கிக் கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் உள்ள நவ லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனநாயக போராட்டத்தின் ஊடாகவே நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றினார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ தகைமையற்றவர் என்பதை நான் முதன் முதலாக குறிப்பிட்டேன். சிரேஷ்டத்துவத்திற்கு மதிப்பளித்து சிறந்த நபர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டேன்.

கட்சி சிரேஷ்டத்துவத்திற்கு முன்னுரிமை வழங்காமல் குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கி மஹிந்த ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்கிறார்.

பெறுபேறு இரண்டரை வருடத்திற்குள் முழு நாடும் வங்குரோத்து நிலை அடைந்து ராஜபக்ஷர்களின் அரசியல் பலவீனமடைந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய பிரதான பேசுப்பொருளாக உள்ளது. தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் உரிய நவடிக்கைகளை முன்னெடுத்தாலும், தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறாது. எப்போதும் இடம்பெறும் என்றும் குறிப்பிட முடியாது.

2024 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். இழக்கப்பட்ட தனது அரசியல் செல்வாக்கை பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடையாக செயற்படுகிறார்.

தேர்தலை பிற்போட்டு மக்களாணையை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதை ஜனாதிபதி ரணில் விளங்கிக் கொள்ள வேண்டும்.மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெறும் என்ற அச்சத்தினால் நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது.

இதன் தாக்கத்தை  ஐக்கிய தேசியக் கட்சி 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எதிர்கொண்டது. ஆகவே குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களாணையை மலினப்படுத்தினால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்றார்.

Please follow and like us: