ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்  

பௌத்த பாலி பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கையிலேயே வியாழக்கிழமை (23) பிக்கு மாணவர்கள் கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் போது ஆசிரியர்கள் சிலர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,

பௌத்த பாலி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. அது பல்கலைக்கழக மானியத்தின் கீழான பல்கலைக்கழகம் அல்ல உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்கலைக்கழகமாகும்.

பௌத்த பாலி பல்கலைக்கழகத்திற்கு மற்றைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது போன்று இசற் புள்ளி பார்ப்பதில்லை. அதற்கான முறை வேறானது. இது விசேட விடயங்களை கொண்டு தனியான சட்டமூலத்தின் ஊடாக அமைக்கப்பட்டது.

இப்போது பௌத்த பாலி பல்கலைக்கழகம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு இருக்கையில் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் பிரச்சினையொன்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வியாழக்கிழமை இவர்கள் கல்வி அமைச்சுக்கு வந்தனர். இதில் சூழ்ச்சிக்கார சக்திகள் உள்ளன.

இதேவேளை இந்த சம்பவத்தின் போது ஆசிரியர் இடமாற்ற சபை கூட்டத்தில் கலந்துகொண்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன்போது நான் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். அமைச்சர் என்ற ரீதியில் எனது கடமையை செய்துள்ளேன். ஆசிரியர்கள் தாக்கப்பட்டமை தாெடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வோம் என்றார்.

Please follow and like us: