சிவனொளிபாத மலை ஏறிக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவிப்பு  

இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று (11) தரிசனம் செய்ய சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடுவழியே குழந்தை பிரசவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு 32 வயதுடைய உடுவர ஆராச்சிகே நிறூஷா தினுஷா என்ற கர்ப்பிணிப் பெண் தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார்.

மலை ஏறிக்கொண்டிருந்த வேளையில் ஊசிமலைப் பகுதியில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்விடத்திலேயே குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

அதனையடுத்து அவரது குடும்பத்தினர் அங்கிருந்து அவசர அவசரமாக நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் 1990 அவசர அம்புலன்ஸ் மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு தாயையும் குழந்தையையும் கொண்டுசென்றுள்ளனர்.

அதன் பின்னர் வைத்தியசாலையில் குழந்தையோடு அனுமதிக்கப்பட்டுள்ள பெண், தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கிளங்கன் ஆதார வைத்தியசாலை மருத்துவரிடம் கேட்டபோது, சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தையும் அதன் தாயும் நலமாக இருப்பதாகவும், பிறந்திருப்பது பெண் குழந்தை எனவும் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: