சொகுசு மகிழுந்தில் மோதி ஒன்றரை வயது சிறுமி பலி!

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் ஓட்டிச்சென்ற சொகுசு மகிழுந்தில் மோதி ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஹுவளையில் களுபோவில பி. ரூபன் பீரிஸ் மாவத்தையில் வசித்து வந்த சுவைரா மொஹமட் முஸ்தாக் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சொகுசு மகிழுந்தினை ஓட்டிச்சென்ற சிறுமியின் தாயாரின் சகோதரரான 28 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சொகுசு காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் கடந்த 16ஆம் திகதி மதியம் வீட்டின் முன்பகுதியில் உள்ள கராஜில் இருந்து வாகனத்தை வெளியில் எடுத்துச்செல்லும் போது, ​​காருக்கு முன்னால் வந்த சிறுமி தரையில் தள்ளப்பட்டு விபத்திற்குள்ளாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரதேசவாசிகள் உடனடியாக  சிறுமியை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதித்து அடிப்படை சிகிச்சை அளித்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று காலை சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் விபத்து இடம்பெற்றமை தெளிவாக பதிவாகியுள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற இடத்தில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை எனவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த கல்கிசை பதில் நீதவான் ரத்ன கமகே முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு காரை பொலிஸ் காவலில் எடுத்து சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

Please follow and like us: