எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும்

எல்லை நிர்ணய குழுவின் நடவடிக்கைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதற்கமைய இம்மாத இறுதியில் இடைக்கால அறிக்கையையும் , மார்ச் இறுதி வாரத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எல்லை நிர்ணய குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
மேலும் 6 மாவட்டங்களின் செயற்பாடுகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஏனையவற்றில் இரு மாவட்டங்களின் செயற்பாடுகள் மாத்திரமே 50 சதவீதத்தையும் விடக் குறைவாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே எமது முழுமையான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 25- 31ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்க முடியும். எனினும் எமது இடைக்கால அறிக்கையை இம்மாத இறுதியில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8800இலிருந்து, 5100 அல்லது 4900 வரை குறைக்க முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.