கொரியா செல்ல 85 ஆயிரம் பேர் விண்ணப்பம்  

தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்பிற்காக, இலங்கை இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வதற்காக, 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 7 ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்காக 85,072 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கு 31,378 பேர் விண்ணப்பித்தனர். இம்முறை அதற்கும் மேலதிகமாக அதிக எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான பதிவுகள் கடந்த 2023.02.13 முதல் 2023.02.23 ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக இடம்பெற்றன என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் தற்போது பணியகத்தினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய வேலை வாய்ப்புக்களுக்கான கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் 2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், மீன்பிடித் துறை வேலை வாய்ப்புக்களுக்கான பரீட்சை, எதிர்வரும் 2023 செப்படம்பர் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பரீட்சைகள் பன்னிப்பிட்டி கொரிய பரீட்சை நிலையத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Please follow and like us: