மும்பையில் 23 சொகுசு வீடுகள் ரூ.1200 கோடிக்கு விற்பனை

இந்தியாவில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையில் மும்பை முன்னணியில் உள்ளது. மும்பையில் கடற்கரையையொட்டி அமைந்துள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளும், பெருநகரின் முக்கிய இடங்களில் அமைந்துள்ள பிரமாண்ட சொகுசு வீடுகளையும் வி.ஐ.பி.க்கள் பல கோடி ரூபாய்க்கு வாங்குகிறார்கள். அந்தவகையில் மும்பையின் வொர்லி பகுதியில் 23 சொகுசு வீடுகள் சுமார் ரூ.1,200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் வொர்லி பகுதியில் டாக்டர் அன்னிபெசன்ட் சாலையில் உள்ள பிரிமியம் சொகுசு திட்டமான டவர் பி ஆப் த்ரி சிக்ஸ்டி மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த 23 சொகுசு வீடுகளை வாங்கி உள்ளனர்.

இந்த பரந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு உடையது. மேலும் ஒவ்வொரு வீடும் ரூ.50 முதல் 60 கோடி வரை விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடுகளை தொழிலதிபரும், கட்டுமான நிறுவன உரிமையாளருமான சுதாகர் ஷெட்டியிடம் இருந்து ராதாகிஷன் குடும்பத்தினர் வாங்கி உள்ளனர்.

சுதாகர்ஷெட்டி பிரம்மால் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1000 கோடி கடன் வாங்கி இருந்ததாகவும், அதனை திருப்பி செலுத்துவதற்காக இந்த வீடுகளை விற்றுள்ளதாகவும் ஷெட்டிக்கு நெருக்கமானவர்கள் கூறி உள்ளனர்.

ஷெட்டி மற்றும் ராதாகிஷன் தமானியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கிடையே கடந்த 4, 5 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததாகவும், மொத்த பரிவர்த்தனை கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

த்ரி சிக்ஸ்டி மேற்கு பகுதியில் உள்ள சில பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இதற்கு முன்பு ரூ.75 முதல் 80 கோடி வரை விற்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஐ.ஜி.இ. பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் இந்த 2 அடுக்குமாடி குடியிருப்புகளை 151 கோடிக்கு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: