Tuesday, September 26, 2023
HomeIndiaதமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை.

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை.

தமிழகத்தில் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலின் முன் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முபினின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று (செப்.16) காலை 6.30 மணியளவில் கோவைக்கு ஹைதராபாத்தில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 22 குழுக்களாகப் பிரிந்து 22 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குழுவில் 4 முதல் 5 அதிகாரிகள் உள்ளனர். நகர எல்லைக்குள் உக்கடம், கவுண்டம்பாளையம், ஆர்எஸ்புரம், கிணத்துக்கடவு உள்பட 21 இடங்களிலும் குனியமுத்தூரில் ஓரிடத்திலும் சோதனை நடைபெறுகிறது. சோதனை நடைபெறும் பகுதிகளில் உள்ளூர் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை கோட்டை பகுதி ராமசாமி நகரில் உள்ள 82வது வார்டு திமுக கவுன்சிலர் முபாசீரா வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இவர் அரபிக் கல்லூரியில் பயில்வதால் அவர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. சோதனைக்கு உள்ளாகியுள்ள அனைவரும் கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள், படிப்பவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாவர். உக்கடம் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபீனும் அரபிக் கல்லூரியில் படித்தவர்தான்.

சோதனை நடைபெறும் பகுதியில் இருந்து யாரும் வெளிவரவும் உள்ளே செல்லவும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

கடந்த அக்டோபரில் அரபிக் கல்லூரியில் நடந்த சோதனையின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையிலேயே தற்போது அங்கு மீண்டும் ரெய்டு நடைபெறுவதாகத் தெரிகிறது. இதுதவிர சென்னையில் ஈஞ்சம்பாக்கம், திருவிகநகர் உள்ளிட்ட இடங்களிலும், தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments