கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சிகிச்சையில் 4 பேர் உள்ளனர்.
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்து கூறுகையில், “39 வயதான நபருக்கு நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்துவந்த நிலையில் தற்போது தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற மருத்துவமனைகளுக்கு அவர் சென்றுவந்த நிலையில் அவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது ரத்த மாதிரிகள் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்த ஆய்வு முடிவை புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகமும் உறுதி செய்துள்ளது.

நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளருடன் தொடர்பில் இருந்த 706 பேரில் 77 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவிலும், 153 சுகாதாரப் பணியாளர்கள் குறைந்த ஆபத்துள்ள பிரிவிலும், 13 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். .
நிபா வைரஸ் தொற்றின் மையமான கோழிக்கோட்டில் உள்ளஅனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.