தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் ஒருவரும், ‘புஷ்பா’ படத்தில் நடித்ததற்காc சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவருமான அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக நடிக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ எனும் படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. இதில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தானா, ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், சுனில், அனுசுயா பரத்வாஜ், ராவ் ரமேஷ், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ப்ரியா மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மிரோஸோ கூபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜட்டில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும், கிறாபிக்ஸ் பணிகளும், படத்தொகுப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புஷ்பா படத்தின் முதல் பாகம் 200 கோடி ரூபாய் பட்ஜட்டில் தயாராகி, இந்தியா முழுவதும் நானூறு கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்து, வசூலில் புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘புஷ்பா 2 தி ரூல்’ எனும் பெயரில் அடுத்த ஆண்டு ஒகஸ்டில் வெளியாகிறது. இந்த திரைப்படமும் வசூலில் சாதனை படைக்கும் என திரையுலக வணிகர்களால் அவதானிக்கப்படுகிறது.