இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மானின் இசைகச்சேரி நிகழ்ச்சி ஒன்று பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில் எல்லா பாதிப்புகளுக்கும் தானே தன்னை பலியாடாக்கி கொள்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசைதுறைக்கு வருகைதந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. இதைக் கொண்டாடும் விதமாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெறவிருந்த இந்நிகழ்ச்சி சீரற்ற காலநிலை காரணமாக காலம் மாற்றப்பட்டது. அதற்கிணங்க இந்த இசைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் இந்த இசைக்கச்சேரி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
குறித்த நிகழ்ச்சிக்கு பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து அனுமதி சீட்டினை பெற்ற பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது . இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு ரசிகர்கள் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து சமூகவலைதளங்களில் தங்களது கருத்துககளை பகிர்ந்து வந்தனர். பல் இசையமைப்பாளர் ரஹ்மானையும் விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பில் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ரஹ்மான், இசை ‘’நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனையடைந்தேன். கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்றபடி வரும் காலங்களில் சென்னை மாநகரில் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் விழித்துக்கொள்ள, இன்று நானே பலிகடா ஆகிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர், ’சிலர் என்னை G.O.A.T. (Greatest of all time என்பதன் சுருக்கம்) என்கின்றனர். ஆனால் மக்கள் விழித்துக்கொள்ள நானே sacrificial goat (பலி ஆடு) ஆகிறேன். குழந்தைகள், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார். இத்துடன் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடக்க விரைந்து நல்ல இடம் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ள அவர், ‘இறைவன் நாடினால் நடக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், “அன்புள்ள சென்னை மக்களே, நுழைவுச் சீட்டு வாங்கி, துரதிர்ஷ்டமான சூழலில் பங்கேற்க முடியாமல் போனவர்கள் உங்கள் டிக்கெட்டின் பிரதியையும் உங்கள் குறைகளையும் arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யுங்கள். எங்கள் அணியினர் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்கள்,” என்று கூறியிருக்கிறார்.
இசைக்கச்சேரியை ஒருங்கிணைத்த நிறுவனமும் இது குறித்து தனது மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரியில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு இசையமைப்பாளராக, ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்குவதே எனது வேலை, மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததால் பாதுகாப்பு முதன்மையான பிரச்சினையாக இருந்தது. நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை, ஆனால் நகரம் விரிவடைகிறது என்பதை நாம் உணர வேண்டும், மேலும் இசை மற்றும் கலை நுகர்வு ஆர்வமும் விரிவடைகிறது.
சாதகமற்ற வானிலை காரணமாக ஆகஸ்டில் இருந்து செப்டம்பருக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் சுமார் 46 ஆயிரம் இருக்கைகளை அமைத்திருந்தனர். சில பிரிவுகளில் மக்கள் ஒரு பகுதியில் மட்டுமே அமர்ந்திருந்தனர். மறுபுறத்திற்கு செல்லவில்லை பணியில் இருந்த காவல்துறையினர் இதனைக் கண்டு அரங்கம் நிரம்பிவிட்டதாக நினைத்து கதவை அடைத்துவிட்டனர் . அச்சமயத்தில் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் 20 நிகழ்ச்சிகளை நடத்தினோம். அனைத்தும் சுமூகமாகவும் பிரச்சினைகளின்றியும் நடந்தது. மறக்குமா நெஞ்சம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு நிகழ்ச்சி. அது சிறப்பானது தான், ஆனால் மக்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது அனைத்திலும் முக்கியமானது.
சர்வதேச அளவில் நமக்கு கட்டமைப்பு தேவைப்படுகிறது. இது எனக்கு ஒரு பாடம். உலகளவில் பல கலை கூட்டங்களுக்கு நான் சென்றுள்ளேன். அதை பார்க்கும் போது, இது ஏன் சென்னையில் உள்ள நம் மக்களுக்கு மறுக்கப்படுகிறது? அவர்கள் இதற்கு மேலானவற்றிற்கு தகுதியானவர்கள் என தோன்றும்.
ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கினுள் இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியாக இசையை கேட்டனர். சென்னை மக்களின் ஆற்றலும் அன்பும் மகத்தானது; சில நேரங்களில், எதையாவது நீங்கள் அதிகமாக நேசிக்கும்போது, அது உங்களிடமிருந்து விலகிச் செல்கிறது . அதுதான் இங்கு நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
சென்னையை கலைத் தலைநகராக மாற்றுவதில் நான் லட்சியமாக இருக்கிறேன், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை, ஏனெனில் மக்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்காக கச்சேரிக்கு வரவில்லை . எனக்காக வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இதை நாங்கள் சரிசெய்வோம். ஏனெனில் ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம்.
நான் என் மகனிடம் இது குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன், நாம் பார்ட்னர்ஷிப்பில் (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்) எதையாவது மேற்கொள்ளும் போது மக்கள் அந்த பார்ட்னர்ஷிப்பை பார்க்க மாட்டார்கள். அவர்கள் நம்மைத்தான் பார்ப்பார்கள் . அங்கு பார்ட்னர்ஷிப் மறைந்துபோகும், நாம் தான் எஞ்சி இருப்போம். நிகழ்ச்சிக்கான அம்சங்களையும் தாண்டி சிந்திக்க வேண்டும். இனி இப்படி நடக்கவிட மாட்டோம் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.