இயக்குநரும், நடிகருமான சேரன் நடிப்பில் ஒராண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இப்படத்தின் தலைப்பும், இப்படம் குறித்து படக் குழுவினரின் விளம்பரமும் பார்வையாளர்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பை உருவாக்கியது. அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
சாதிய அடுக்கு முறை மற்றும் ஒடுக்கு முறை மிகுந்த தென் தமிழகத்தின் உள்ளார்ந்த கிராமம் ஒன்றில் சலவை தொழில் செய்யும் குடும்பத்தின் வாரிசாக இருக்கிறார் சேரன். இந்த தொழிலுடன் ஊரில் யாரேனும் இறந்தால் அவர்களின் இறுதி காரியம் செய்யும் பணியையும் சேரன் குடும்பம் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறது. இதனால் ஊர்மக்கள் மத்தியில் மரியாதை இல்லை. படித்து அரசு பணிக்கு முயற்சி செய்யும் சேரன், இந்த தொழிலை முற்றாக கைவிட்டு, கௌரவமாக வாழ நினைக்கிறார்.
இந்நிலையில் அந்த ஊரில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரிய மனிதர் ஒருவர் இறந்து விடுகிறார். இவருக்கு இறுதி காரியம் செய்ய அந்த குடும்பத்தினரும், ஊர் மக்களும் சேரனுக்கு அழுத்தமும், நெருக்கடியும் தருகிறார்கள். சேரன் அந்தப் பணியை செய்ய உறுதியாக மறுக்கிறார். இதனால் ஊரில் கலவரம் மூளும் சூழல் உருவாகிறது. இதனால் இப்பிரச்சனை காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்திற்கு செல்கிறது. சேரனின் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.
சேரனின் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தடைகளை உடைத்து முன்மாதிரியாக திகழ வேண்டும் என்ற மனவெழுச்சியுடன் செயல்படும் அந்த கதாபாத்திரத்தை நடிகர் சேரன் உணர்ந்து நிறைவாக செய்திருக்கிறார். சேரனுக்கு உதவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல. ராமமூர்த்தியின் கதாபாத்திரமும் கச்சிதம். அதற்காக அவர் தன்னுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
இவர்களை எல்லாம் கடந்து ஆதிக்க சாதியின் மொத்த பிம்பமாக நடித்திருக்கும் நடிகர் லால்.. தன்னுடைய அனுபவமிக்க நடிப்பாள் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார்.இது போன்ற சாதியம் பேசும் படைப்புகளில் ஒடுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலிகளை மட்டுமே உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு ஒன்றையும் பரிந்துரைத்திருக்கிறார்.
சேரனின் தங்கை கதாபாத்திரத்தின் காதலால் திரைக்கதைக்கு எந்த ஒரு வலிமையும் கிடைக்கவில்லை. ஆனால் சேரனின் தங்கையாக நடித்திருக்கும் நடிகை தீப்ஷிகாவும், அவருடைய காதலனாக நடித்திருக்கும் நடிகர் துருவாவின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் உரையாடலில் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் அனைத்தும் இயல்பாக இல்லாமல் படைப்பாளியின் திணிப்பாகவே இருக்கிறது.
பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத்தொகுப்பு என அனைவரும் இயக்குநரின் படைப்பு கற்பனைக்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். முண்டாசுக் கவிஞனின் தமிழ் சமூகம் குறித்த சிந்தனையான ‘சாதிகள் இல்லையடி பாப்பா ‘ என்ற கவிதை வரியை நினைவுபடுத்தும் படைப்பாக இது இருந்தாலும், ஆங்காங்கே பிரச்சார படைப்பாகவும் இருப்பதால் பார்வையாளர்களிடத்தில் சோர்வும், தொய்வும் ஏற்படுகிறது.