Tuesday, September 26, 2023
HomeCinemaவிமர்சனம் -ஜவான்

விமர்சனம் -ஜவான்

ஸ்ட்ரைக்கர் , ஜே எஸ் ஜே சினிமாஸ் தென்னிந்திய இயக்குநரான அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து பார்ப்போம்.

தந்தை ஷாருக்கான் தேச துரோகி என முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவர் மீது சுமத்தப்பட்ட அவப் பெயரை மகன் ஷாருக்கான் துடைத்தெறிகிறார். அதனுடன் தற்போதைய சூழலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? தேவை என்ன? என்பதை சொல்வதுடன், அதனை செயலிலும் சாத்தியப்படுத்தி காட்டுகிறார். இது எப்படி? என்பதனை பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புடன் சொல்லியிருக்கும் திரைப்படம் தான் ஜவான்.‌

தந்தையின் சாவுக்கு பழிக்கு பழி வாங்கும் மகனின் கதை தான் ஜவான் என்றாலும்.., அதில் சமூக பிரச்சனையை இணைத்து ஆரவாரமான ஆக்சன் மசாலாவாக ஜவானை வழங்கி, ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரை விரும்பும் ரசிகர்களுக்கு மாஸான விருந்தை அளித்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.‌

லாஜிக்கை விட ஷாருக்கான் -அட்லீ கூட்டணியின் மேஜிக் தான் படத்தின் பிரதான அம்சம் . நாம் கற்பனை செய்தும் பார்க்க இயலாத காட்சிகளை திரையில் வியப்பூட்டும் வகையில் காட்சிப்படுத்தி நம் விழிகளை விரியவைத்து ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குநர் அட்லீ தலைமையிலான கூட்டணி.

தந்தை விக்ரம் ரத்தோர் – மகன் ஆசாத் ரத்தோர் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் தனக்குத் தெரிந்த பாணியில் வித்தியாசத்தை காட்டி நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்வதுடன் தன்மீது தக்க வைத்துக் கொள்கிறார்.‌

நர்மதா எனும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாராவிற்கும் மாஸான காட்சிகளை அமைத்து மனசில் இடப்பிடிக்க வைக்கிறார் அட்லீ.

ஆயுத வியாபாரியாக வரும் விஜய் சேதுபதி வழக்கம் போல் உடல் மொழியாலும், கண் அசைவாலும், டொயலாக்குகளை அதிகம் பேசாமல் வில்லத்தனம் காட்டி ரசிகர்களை கவர்கிறார்.

இயக்குநர் அட்லீ பிளாஷ்பேக் காட்சிகளை அழுத்தமாக அமைப்பதில் நிபுணர் என்ற அடையாளத்தை… இந்தப் படத்திலும் சற்று அதிகமாக பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் இடம் பெறுகிறது. ஆனால் அனைத்திற்கும் பாடல்களை வைத்திருப்பது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.

பிளாஷ்பேக் காட்சியில் தீபிகா படுகோன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரசிகர்களை கலங்க அடிக்கிறார் அட்லீ. பிரியாமணி, யோகி பாபு தங்களின் திரை தோன்றலை தங்களுக்கே உரிய பாணியில் நிகழ்த்தி ரசிகர்களை வசப்படுத்துகிறார்கள்.

அட்லீயின் படைப்பின் மீது விமர்சகர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டு அவரின் படங்கள் ஏற்கனவே வெளியான படங்களில் சாயல்கள் இருக்கும் என்பதுதான். இந்தப் படத்திலும் அவை இருந்தாலும், காட்சி உருவாக்கத்திலும் .. காட்சி அமைப்பிலும் .. பிரம்மாண்டத்தை புகுத்தி படமாளிகை அனுபவத்தை ரசனையுடன் அனுபவிக்க செய்கிறார்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு.. என பல விடயங்களை இயக்குநர் அட்லீ தொட்டிருப்பதும்… இது தொடர்பாக ஷாருக்கானின் அரசியல் ரீதியிலான வசனமும் ரசிகர்களின் கரவொலியை உறுதிப்படுத்துகிறது.‌

ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவும், அனிருத்தின் பின்னணி இசையும் படத்திற்கு வலிமை  சேர்த்திருக்கிறது. வந்த எடம்… ஹய்யோடா ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments