தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா ‘லைகர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு கட்டாய வெற்றியை வழங்க வேண்டிய தருணத்தில் அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘குஷி’. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? விஜய் தேவரகொண்டாவின் சந்தை மதிப்பை உயர்த்துமா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
‘குஷி’ எனும் பெயரில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே விஜய்- ஜோதிகா நடிப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் அதே பெயரில் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் நடித்திருக்கிறார்கள்.
வழக்கமான காதல் கதை என்றாலும் இதில் திருமணத்திற்கு முன்னரான காதலும், திருமணத்திற்கு பின்னரான காதலும் குறித்து பேசப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடத்தில் கவனம் பெறுகிறது.
அரசாங்க தொலை தொடர்பு துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் விப்லவ் (விஜய் தேவரகொண்டா) காஷ்மீரில் பணியை தொடங்குகிறார்.
காஷ்மீரை பற்றிய அவரது எதிர்பார்ப்பும், யதார்த்தமும் வேறு வேறாக இருக்க மீண்டும் சென்னைக்கு திரும்பிவிடலாம் என எண்ணும்போது ஆராத்யாவை ( சமந்தா) கண்டவுடன் காதலிக்கிறார். தன் காதலுக்காக பல விடயங்களை செய்கிறார்.
ஒரு புள்ளியில் நாயகனின் காதலை நாயகியும் ஏற்றுக்கொள்கிறார். இருவரும் தங்களது காதலை பெற்றோர்களிடம் சொல்லி திருமணம் செய்து கொள்வதற்காக அவர்களின் சம்மதத்தை கேட்கிறார்கள்.
விட்லவ்வின் தந்தை ( சச்சின் கடேக்கர்) நாத்திகராகவும், நாத்திக கொள்கையை பரப்புரை செய்பவர். ஆராத்யாவின் தந்தை ஆத்திகராகவும், இந்து சமய சொற்பொழிவாளராகவும் இருக்கிறார்.
இந்த நேர் எதிர் துருவங்களாக இருக்கும் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு தடையாக இருக்கிறார்கள். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி விப்லவ்வும், ஆராத்யாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இல்லற வாழ்க்கையை இனிதாக தொடங்கும் இவர்களுக்குள் நாளடைவில் கருத்து வேறுபாடு வருகிறது. இதனால் இவர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. அதன் பிறகு இவர்கள் எப்படி ஒன்றிணைந்தார்கள்? என்பதே படத்தின் கதை.
படத்தில் நாயகியும், நாயகனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதற்கும் காதலிப்பதற்கு மட்டும் காஷ்மீர் பின்னணி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் காஷ்மீரின் பனி படர்ந்த மலை சிகரத்தின் அழகை கடை கோடி பாமர ரசிகனுக்கும் அழகாக கடத்தியதற்காக படக்குழுவினரை பாராட்டலாம்.
திருமணத்திற்குப் பிறகு காதல் மேலும் வலிமையாக்கப்பட வேண்டும் என்பதனை இப்படைப்பை காணும் இளம் தம்பதிகளுக்கு வலியுறுத்திருக்கும் இயக்குநரை மனதார பாராட்டலாம்.
இதற்கு ஏற்ற வகையில் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் திரையில் தோன்றி மாயாஜாலம் நிகழ்த்தி பார்வையாளர்களை வசீகரிக்கிறார்கள்.
இவர்களின் திரை தோன்றலின் பின்னணியில் இருக்கும் கெமிஸ்ட்ரி படத்தின் ஆகப்பெரிய பலம். அதிலும் குறிப்பாக இறை நம்பிக்கை கொண்ட ஆராத்யா கதாபாத்திரத்தில் சமந்தா நேர்த்தியாக நடித்து, ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார். அதிலும் இரண்டாம் பாதியில் பாசமிக்க தந்தைக்கும், அன்புமிக்க கணவனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் போது அவருடைய நடிப்பு சபாஷ்.
ரோகிணி- ஜெயராம் தம்பதிகளின் காதல் கதையை பிரதான காதல் கதைக்கு இணையாக உருவாக்கிய இயக்குநரின் படைப்பு திறனை பாராட்டலாம். இதன் மூலம் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு குழந்தைகளை விட, இருவர்களுக்கு இடையேயான காதல்தான் முக்கியம் என்பதை குறிப்பிட்டிருப்பதும் பாராட்டத்தக்கது.
‘ஆத்திகம், நாத்திகம்னு சண்ட போடுற நாம. அடிப்படையில மனுஷங்க அப்படிங்கறத மறந்துடறோம்..’ எனும் வசனம் பளீச்.
முதல் பாதியில் காஷ்மீர் இரண்டாம் பாதி கேரளா என நிலவியல் பின்னணியில் பான் இந்திய படைப்பாக உருவாக்கி இருக்கும் இயக்குநரின் விசுவல் கற்பனையையும் பாராட்டலாம்.
ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்தில் வெற்றிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.