வடசென்னையில் ஆடை உலர் வெளுப்பக தொழிலை செய்து வரும் உத்தமர் காந்தி (ஆடுகளம் முருகதாஸ்) – காளியம்மா (சாய் ஸ்ரீ பிரபாகரன்) தம்பதிகளுக்கு சத்யா ( ஹமரேஷ்) எனும் மகனுடனும், வேம்பு லட்சுமி ( அக்சயா ) எனும் மகளுடனும் பொருளாதார நிலையில் தன்னிறைவு இல்லாமல் கடனாளியாக வாழ்கிறார்கள்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் சத்யா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்கள். சத்யா அங்குள்ள அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலையில் ‘ஏ லெவல்’ கல்வி கற்று வருகிறார். ஒருமுறை நண்பர்களுடன் ஏற்பட்ட சிறிய தகராறால்.. இவர்களை காவலர்கள், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
காவல் நிலையத்திற்கு குடும்பத்துடன் வரவழைத்து விட்டானே..! என சத்யா மீது அவரது பெற்றோர்கள் கடும் கோபம் அடைகிறார்கள். அத்துடன் உன் உடன் படிக்கும் சக மாணவர்களின் சகவாசம் சரியாக இல்லை என அவர்களே தன்னிச்சையாக அவதானித்து.. சத்யாவை அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பாடசாலை ஒன்றில் சேர்க்கிறார்கள். அங்குள்ள மாணவ மாணவிகளுக்கும், புதிதாக சேர்ந்திருக்கும் சத்யாவிற்கும் இடையே அதே வகுப்பில் படிக்கும் பார்வதி ( பிரார்த்தனா சந்திப்) யுடனான நட்பு மற்றும் காதல் விடயத்தில் மோதல் உருவாகிறது.
அதே தருணத்தில் சத்யாவின் பெற்றோர்கள், சத்யாவின் கல்விச்செலவிற்காக கடுமையாக உழைக்கிறார்கள். சத்யா பாடசாலையை விட்டு, வீட்டுக்கு வருகை தரும் போது தாய், சகோதரி, தந்தை எனும் மூவரில் யாரும் இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். இதனை உணர்ந்து கொள்ளும் சத்யா.. தன் குடும்பத்தினருக்காக எம்மாதிரியான முடிவை மேற்கொள்கிறார்? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
இயக்குநர் வடசென்னை பின்னணியில் கதை களத்தை அமைத்ததும்… அங்கு சலவை தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வியலை விவரிக்க திட்டமிட்டதும் சரி. ஆனால் அவர்கள் தங்கள் சக்திக்கு மீறி ஆசைப்பட்டு.. அதனால் ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ள இயலாமல்.. மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு திரும்புவது போல் கதையை அமைத்திருப்பது ஏன்? என்பதுதான் புரியவில்லை.. அதிலும் குறிப்பாக கதையின் நாயகனான சத்யாவின் தந்தையிடம் மெத்த படித்த கதாபாத்திரம் ஒன்று ”சத்யா கடலில் நீந்தும் மீன். அவனை நீ கிணற்றில் விட்டு விட்டாய்..” என பேசுகிறது. இதற்கு என்ன பொருள் என்பதை இயக்குநர் தான் விவரிக்க வேண்டும்.
சத்யாவாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் ஹமரேஷ் – பாடசாலையில் பயிலும் மாணவனாக அதே பருவத்திற்குரிய இயல்புடன் சிறப்பாக நடித்திருக்கிறார். பார்வதியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பிரார்த்தனா சந்தீப் -கண்களாலும், முகத்தில் கொப்பளிக்கும் அதீத இளமையாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அழகால் கவர்கிறார். சத்யாவின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ்- அவரது மனைவியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை சாய் ஸ்ரீ பிரபாகரன்- அளவாக நடித்து, மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
கதை களத்தில் இடம்பெறும் தளங்களை அதற்கே உரிய நேர்த்தியுடன் காட்சிப்படுத்தி ஒளிப்பதிவாளர் தன் திறமையை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகிறார். காதலும் நட்பும் கலந்த உறவை அழகாக சொல்லும் இந்த திரைக்கதையில் பாடல்களும், பின்னணியிசையும் காதிற்கு விருந்தாக அளித்திருக்கிறார் இசையமைப்பாளர். படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என பெரும்பாலான காட்சிகளின் நீளம் அதிகம். படத்தொகுப்பாளர் இன்னும் துல்லியமாக செதுக்கியிருந்தால் பல இடங்களில் ஏற்படும் தொய்வு மறைந்திருக்கும்.
படைப்பாளியின் முதல் படைப்பில் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதில் உள்ள நிறைகளை பட்டியலிட்டு பாராட்டுவது தான் மரபு. இருப்பினும் ரங்கோலி எனும் கதை யாருக்கு? என்ன விடயம் சொல்லப்பட்டிருக்கிறது? என தேடினாலும் கிடைக்கவில்லை.