மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்கக் கோரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி வகித்த 1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, பின்னர் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடக்கவே, 2017-ல் வழக்கு முடிவுக்கு வந்தது. ஜெயலலிதா அப்போது உயிரோடு இல்லாததால் மற்ற மூவரும் சிறைக்குச் செல்ல நேரிட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தொடர்புடைய தங்க நகைகள் உட்பட பல்வேறு உடைமைகள் பெங்களூரு நீதிமன்றத்தால் கைப்பற்றப்பட்டன. முன்னதாக, 1996 டிசம்பர் 11-ம் திகதியே போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த பொருள்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதால் ஜெயலலிதாவின் உடைமைகளும் பெங்களூரு நீதிமன்றத்துக்கு கைமாற்றப்பட்டதாகக் கருதப்பட்டன.
இந்த நிலையில், கர்நாடக அரசு வசம் இருக்கிற ஜெயலலிதாவின் பொருள்களை ஏலம்விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடக அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பொருள்களை ஏலம்விட வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.