Wednesday, January 15, 2025
HomeSrilankaPoliticsவடக்கை முன்னேற்ற புலம்பெயர் தமிழர்களே முதலிடுங்கள்! - ஆளுநர் சார்ள்ஸ் அழைப்பு.

வடக்கை முன்னேற்ற புலம்பெயர் தமிழர்களே முதலிடுங்கள்! – ஆளுநர் சார்ள்ஸ் அழைப்பு.

“எமது வடக்கு மாகாணத்தைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதுவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எமது பகுதியை மீட்டெடுக்க நம்மிடம் உள்ள ஒரேயொரு உபாயம்.  புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை  மேம்படுத்தல் என வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக அனைத்துத் தரப்புக்களும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது மாகாணத்தின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. மாகாணத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றைத் தருவதற்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைக் முன்னேற்றுவதற்கான – பலப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை வடக்கு மாகாணத்தில் அதிகரித்து பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிந்திக்கப்படுகின்றது. சுற்றுலாத்துறையை இன்னும் விரிவுபடுத்தி, அதனூடான வருமானமீட்டலையும் வடக்குக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனைகளையும் பெற்று வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படும். எமது மாகாணத்தைச் சிறந்த மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற அவா எனக்கு உண்டு. மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிறந்த பெறுபேற்றைத் தருவதற்கு அனைத்துத் தரப்பினரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments