தங்களுடைய மத அடையாளத்தை கடைப்பிடிக்கும் வகையில், அறுவை சிகிச்சையின்போதும், ‘ஹிஜாப்’ எனப்படும் தலை மற்றும் முகத்தை மறைக்கும் துணி போன்ற ஆடையைப் பயன்படுத்த, கேரள மருத்துவ மாணவியர் சிலர் அனுமதி கோரியுள்ளதற்கு, மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் சிலர், கல்லுாரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.
‘எங்களுடைய மத வழக்கப்படி, ஹிஜாப் அணிவது கட்டாயமாகும்.
இதனால், அறுவை சிகிச்சைகளின்போது, தலை மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான, மருத்துவ அங்கியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய மருத்துவர் சங்கம், கேரளா அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த அமைப்புகள் கூறியுள்ளதாவது:
மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளில், நோயாளிகளின் நலன்களே முக்கியம்.
இது, உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உரிய கிசிச்சை அளிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இதில் மதத்தை புகுத்த நினைப்பது சரியல்ல. சர்வதேச அளவிலான மருத்துவ நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும். இந்த மாணவியரின் கோரிக்கை ஏற்புடையதல்ல.
இவ்வாறு அமைப்புகள் கூறியுள்ளன.