கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினார். இதற்காக கருணாநிதி சட்டமே கொண்டு வந்தார். ஐகோர்ட்டின் தீர்ப்பு சமூகநீதியை பாதுகாப்பதில் ஒரு நல்ல காரணியாக அமைந்துள்ளது.
விலைவாசி உயர்வு என்பது நடுத்தர, ஏழை மக்களை பாதிக்கத்தான் செய்கிறது. ஆனால் காலமெல்லாம் கஷ்டப்படும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும்.
பிரதமர் மோடி உலக நாடுகளை சுற்றி வந்து இந்தியாவிற்கு பெருமை தேடி தரவில்லை . அமெரிக்க பயணத்தின்போது அவருக்கு பெரிய எதிர்ப்பு இருந்துள்ளது. மணிப்பூரில் நடக்கும் ரத்த களரியை தடுக்க இயலாமல், கடமையை மறந்து அவர் ஊர் சுற்றி வருகிறார். எனவே பிரதமர் பொறுப்பற்றவர்’ என்றார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கருப்ப்ச்சட்டை சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த அவர், கருப்பே இருக்கக் கூடாது என்றால் கருமேகங்கள் சூழும் போது, அதனை கவர்னர் தடுத்துவிடுவாரா ? கவர்னரின் பேச்சுக்கு எல்லையே இல்லை.
இந்துத்துவாவிலிருந்து இந்த நாடு வந்துள்ளது என தொடர்ந்து தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்திற்கும் எதிராக பேசி வருகிறார். எனவே அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதியிடம் ஒப்படைக்க கையெழுத்து இயக்கம் நடததி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.